தருமபுரி, சேலம் கோட்டப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 1300 பேருக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தருமபுரி-சேலம் கோட்டத்திற்கு 2007-ஆம் ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான நேர்காணலுக்குத் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் பணிக்கப்பட்டனர்.
வறட்சியினால் பின்தங்கிய மாவட்டத்தில் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றனர். இருப்பினும் எதிர்காலம் கருதி தங்களின் முயற்சியில் சற்றும் மனம் தளராமவ் ஆளும் தரப்பை நிறைவு செய்ய தத்தம் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு சண்டையிட்டும், பலர் வட்டிக்குப் பணம் வாங்கியும், தங்களுக்குச் சொந்தமான வீட்டையும், நிலத்தையும் விற்றும், சிலர் தங்கள் மனைவியின் நகை, தாலியை விற்றும் ஒருவழியாக அதிகார வர்க்கத்தினரிடம் பணத்தைக் கட்டினர்.
2007-ஆம் ஆண்டு 1300 பேர் வேலைக்குச் சேர்வதற்கு அரசாணையும் 240 பணி நாட்களுக்குப் பின்னர் நிரந்தரம் செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடன் பணியில் சேர்ந்து ஆண்டுகள் நான்கு உருண்டோடின. பல 240 நாட்கள் பணி செய்த பின்பும் தி.மு.க. ஆட்சியின் இறுதி நாட்கள் எண்ணப்படுகின்ற இந்த நாள்வரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஏமாற்றப்படுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அந்தத் தொழிலாளர்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லை. மாறாக, முன்னின்று கேட்பவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பணி நீக்கம் செய்வதும், இடமாற்றம் செய்வதுமாக அலைகழிக்கப்பட்டனர்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அத்தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக 25.02.2011 வெள்ளிக்கிழமை தொடங்கி கடந்த ஐந்து நாட்களாகத் தம் குடும்பத்தினருடன் தொடர் உண்ணாவிரத அறவழிப் போராட்டம் இருந்து வருகின்றனர். இதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை மிரட்டுகிறது.
ஒலிபெருக்கி அனுமதி வழங்காமல் அவமதிக்கப்படுகின்றனர். தருமபுரி அரசு போக்குவரத்துத் தலைமை அலுவலகத்தின் எதிரே சாலை ஓரத்தில் சாமியானா பந்தலிட்டு நியாயம் வேண்டி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இதில் மொரப்பூர் ரமேஷ், நண்டுகாரம்பட்டி சண்முகம், ஊத்தங்கரை வடிவேல் ஆகியோர் நேற்று முன்தினம் மயங்கி விழுந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை அரசுத் தரப்பில் போராடி வரும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன்வரவில்லை. அரசின் இந்த அலட்சியப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். வேலை வழங்கியதற்கு கையூட்டு லஞ்சம் வாங்கியும் பணி நிரந்தரம் வழங்காதது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு. இதுதான் அரசு போக்குவரத்துத் துறை இயங்கும் லட்சணம்.
விரைவில் ஆட்சி மாறும்; அப்போது காட்சிகளும் மாறும். இதுபோன்ற லஞ்சம் வாங்கி மோசடி செய்தவர்கள் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். எனவே, தாமதம் இன்றி தருமபுரி-சேலம் கோட்டப் போக்குவரத்துப் பணியாளர்கள் 1300 பேருக்கும் பணி நிரந்தரம் வழங்கி ஆணை பிறப்பித்திட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment